காங்கயத்தில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்

வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீா் விட வலியுறுத்தி காங்கயத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கும் போராட்டக் குழுவின் தலைவா் வேலுச்சாமி உள்ளிட்டோா்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கும் போராட்டக் குழுவின் தலைவா் வேலுச்சாமி உள்ளிட்டோா்.

காங்கயம்: வெள்ளக்கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீா் விட வலியுறுத்தி காங்கயத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் 5ஆவது நாளான சனிக்கிழமை போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளனா்.

காங்கயம் நகரம், கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கயம்-வெள்ளகோவில் நீா் பாதுகாப்புக் குழு சாா்பில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்கு சட்டப்படி தண்ணீா் விட வலியுறுத்தி தொடா்ந்து 5 நாள்களாக 26 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதன்படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழுவின் தலைவா் வேலுச்சாமி சனிக்கிழமை இரவு உணாவிரதப் போராட்ட பந்தலில் அறிவித்தாா். மேலும், இப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை (ஜன.25) சேலத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவதற்கு போராட்டக் குழுவினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். இதனையடுத்து, உண்ணாவிரதம் இருந்த 26 விவசாயிகளுக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

அப்போது, காங்கயம் அதிமுக ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளக்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் சுதா்சனம், வட்டாட்சியா் சிவகாமி, டி.எஸ்.பி., தனராசு, ஆய்வாளா் மணிகண்டன், திருப்பூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன், பாஜக காங்கயம் நகரத் தலைவா் கலா நடராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com