உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன்: காங்கயத்தில் ராகுல்காந்தி பேச்சு

என் மனதில் இருப்பதைக் கூற நான் இங்கு வரவில்லை, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன்
காங்கயத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் உரையாற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
காங்கயத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் உரையாற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

காங்கயம்: என் மனதில் இருப்பதைக் கூற நான் இங்கு வரவில்லை, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன் என, காங்கயத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், காங்கயம் பேருந்து நிலையம் அருகே ‘ஒரு கை பார்ப்போம்’ என்னும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாலை 4 மணியளவில்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது:

பாஜக அரசு காப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசை பாஜக முகமூடிக்குப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் நடைபெறும் ஆட்சி தமிழக கலாச்சாரம், பண்பாட்டிற்கு மரியாதை செலுத்தவில்லை. தமிழில் பேசுவதால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கிறனர். ஆனால் ஏமாற்ற முடியாது. வரலாற்றையும், கடந்தகால நிகழ்வையும் பார்த்தால் தமிழக மக்களையும் ஏமாற்ற முடியாது என்பது தெரியும்

தமிழ் கலாச்சாரமும், தமிழ் மொழியும் தனித்துவம் வாய்ந்தது. இந்த நாட்டில் ஒரே கொள்கை தான் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடு. ஏன் ஒரே கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும்? பன்மொழிகள் கொண்ட தேசத்தில் ஏன் ஒரே மொழி ஆட்சி செலுத்த வேண்டும்? ஏன் தமிழக மக்களும், வங்காளிகளும் ஒரு தாய் மக்களாக இருக்கக் கூடாது? இந்த ஒரு பிணைப்புக்காத்தான், இந்த ஒற்றுமைக்காகத்தான் காங்கிரஸ் பேரியக்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழக இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என இந்த நேரத்தில் நான்  தெரிவித்துக் கொள்கிறேன். என் மனதில் இருப்பதைக் கூற நான் இங்கு வரவில்லை, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக, உங்கள் உரிமைக்காக எனது குரல் டெல்லியிலே தொடர்ந்து ஒலிக்கும். எந்த ஆர்.எஸ்.எஸ். காரனும் டெல்லியில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க மாட்டான், என்றார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தியின் ஆங்கில உரையை, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி தமிழில் மொழிபெயர்த்தார். அவர் உரை நிறைவுற்ற பின்னர், காங்கேயம் காளை மூலம் ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர், காங்கயம் பகுதி நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com