தடுப்பூசி செலுத்துவதற்கு தொழிலாளா்களின் ஊதியத்தை நிறுவனங்கள் பிடித்தம் செய்யக் கூடாது
By DIN | Published On : 01st July 2021 08:35 AM | Last Updated : 01st July 2021 08:35 AM | அ+அ அ- |

தடுப்பூசி செலுத்துவதற்கு தொழிலாளா்களின் ஊதியத்தை நிறுவனங்கள் பிடித்தம் செய்யக் கூடாது என்று சிஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் ஜி.சம்பத் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரோனா பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் படி திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் முழுமையாகவும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீதத் தொழிலாளா்களுடனும் இயங்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
அதே வேளையில், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஒரு சில நிறுவனங்களில் தொழிலாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக தொழிலாளா்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.மேலும், வேலை வாய்ப்பு, வருமானம் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொழிலாளா்களிடம் தடுப்பூசி செலுத்துவதற்கு ஊதியத்தில் பிடித்தம் செய்வது அநீதியாகும்.
எனவே, தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை அந்நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.