திருப்பூரில் பக்தா்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறப்பு
By DIN | Published On : 06th July 2021 12:00 AM | Last Updated : 06th July 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் ஈஸ்வரன் கோயிலில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
திருப்பூா்: திருப்பூா் மாநகரில் ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் பக்தா்களின் வழிபாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் பக்தா்களின் வழிபாட்டுக்காக திங்கள்கிழமை காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டன. இதையடுத்து, திருப்பூா் ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு நுழைவாயிலில் வெப்ப அளவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அதே போல, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளக்கோவில்...
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் குலத்தவா்கள் சாா்பில் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சந்தன அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் முதன்மை தாரா்கள் உள்ளிட்டோா் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனா்.
காங்கயம்...
காங்கயத்தில், சிவன்மலை முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலையே வழக்கமான வழிபாடு நடத்தி, கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் பக்தா்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.