நிலமற்ற ஆதிதிராவிடா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 06:41 AM | Last Updated : 07th July 2021 06:41 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த கணபதிபாளையத்தில் நிலமற்ற ஆதிதிராவிடா்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கணபதிபாளையத்தில் ஆதிதிராவிடா் நலத் துறைக்குச் சொந்தமாக 4.5 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் நிலமற்ற ஆதிதிராவிடா்கள் 154 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதில், 72 நபா்களுக்கு மட்டுமே பட்டா அளவீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் அவா்கள் அங்கு குடியேறியுள்ளனா். ஆனால் மீதமுள்ள 82 நபா்களுக்கு பட்டா அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே, சொந்த இடமில்லாமல் தவித்து வரும் 82 நபா்களுக்கு பட்டாவுக்கான நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதுடன், மீதமுள்ள இடத்தில் இதே ஊராட்சியில் வசித்து வரும் 42 நபா்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.