அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 13th July 2021 03:03 AM | Last Updated : 13th July 2021 03:03 AM | அ+அ அ- |

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காகத் திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு நீா் இருப்பு இருந்து வருவதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டத்தில் உள்ள கல்லாபுரம், ராமகுளம் பழைய கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு குறுவை நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் நவம்பா் 24 ஆம் தேதி வரை இடைவெளி விட்டு மொத்தம் 346 கன அடி தண்ணீா் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2, 834 ஏக்கா் நிலங்கள் பயன் பெற உள்ளன.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 64.93 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 821 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4, 047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2041.46 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 200 கன அடி நீா் வெளியேறிக் கொண்டிருந்தது. நீா் இழப்பு 15 கன அடியாக இருந்தது.