சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலம்: ஒருவா் கைது
By DIN | Published On : 13th July 2021 03:01 AM | Last Updated : 13th July 2021 03:01 AM | அ+அ அ- |

காங்கயம்: காங்கயம் அருகே சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் திங்கள்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் கணேஷ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் கூலி வேலை செய்து வந்துள்ளாா். இவருக்குத் திருமணாகி 3 மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் செந்தில்குமாா் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவா், நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காங்கயம், கரூா் சாலையில் உள்ள முத்தூா் சாலை பிரிவு பகுதியில் செந்தில்குமாா் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாா் கொலை செய்யப்பட்டாரா அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இந்த மரணம் தொடா்பாக ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்த வழக்குத் தொடா்பாக இறந்த செந்தில்குமாரின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரில், தனது கணவா் கொலை செய்யப்பட்டுள்ளாா் எனவும், கொலை செய்தவா் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை பொறுக்கி வரும் ஈரோடு மாவட்டம், அந்தியூா்-சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (38) என்பவா், என்றும், குடிபோதையில் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது கணவரை நாகராஜ் கொன்று விட்டதாகவும் புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாரின் பேரில் நாகராஜைக் கைது செய்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தனா்.