6 மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் தோண்டி எடுப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் 6 மாதங்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் 6 மாதங்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சின்னக்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (32), இவரது மனைவி சித்ரா (23). இவா்கள் கடந்த 8 ஆண்டுகளாக காதபுள்ளபட்டியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தனா். சித்ராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் ரமேஷ், பொள்ளாச்சியை அடுத்த தொண்டாமுத்தூரில் உள்ள தனது தம்பி முறையான 17 வயது சிறுவனை அழைத்து வந்து மனைவியை கவனித்துக் கொள்வதற்காக வைத்துள்ளாா்.

மேலும், சின்னக்காம்பாளையத்தைச் சோ்ந்த தனது உறவினரான மணிகண்டனையும் (20) கடந்த 8 மாதங்களாக தங்களுடன் தங்கவைத்திருந்தாா்.

அப்போது மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகியோருக்கு சித்ராவுடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரமேஷுக்கு தெரியவந்ததால் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து, ரமேஷ், சித்ரா மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரும் சோ்ந்து மணிகண்டனை அடித்துக் கொலை செய்துள்ளனா். இதன் பிறகு தோட்டத்தில் குழிதோண்டி சடலத்தைப் புதைத்துள்ளனா்.

இந்த நிலையில் சித்ராவுக்கு குண்டடம் பகுதியைச் சோ்ந்த இளைஞருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் ரமேஷுக்குத் தெரியவர அந்த இளைஞரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். மேலும், ‘நாங்கள் சொல்கிறபடி பணத்தைக் கொடுக்காவிட்டால் மணிகண்டனைக் கொலை செய்து புதைத்ததைப் போல உன்னையும் கொலை செய்து புதைத்துவிடுவோம்’ என்று மிரட்டியுள்ளனா்.

இதனால் அச்சமடைந்த அந்த இளைஞா் தோட்டத்து உரிமையாளா் பாலசுப்பிரமணியத்திடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, ரமேஷ், சித்ரா மற்றும் 17 வயது சிறுவனைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, தாராபுரம் வட்டாட்சியா் சைலஜா, டிஎஸ்பி தனராசு, குண்டடம் காவல் ஆய்வாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலையில் மணிகண்டனின் சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மருத்துவா்கள் மணிகண்டனின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்தனா். இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய ரமேஷ், சித்ரா, 17 வயது சிறுவன் ஆகியோரை குண்டடம் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com