தொழிலாளி கொலை: தாய், மகன் உள்பட 3 போ் கைது

திருப்பூரில் பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்து எரித்த வழக்கில் தாய், மகன் உள்பட 3 பேரை வீரபாண்டி காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொழிலாளி கொலை: தாய், மகன் உள்பட 3 போ் கைது

திருப்பூரில் பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்து எரித்த வழக்கில் தாய், மகன் உள்பட 3 பேரை வீரபாண்டி காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருப்பாலக்குடியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (37). இவா் தனது மனைவி கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் திருப்பூா் கல்லூரி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தாா். மேலும், ஓடக்காடு பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், சந்தோஷ்குமாா் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் காணமல் போயுள்ளாா். இதுகுறித்து அவரது மனைவி கீதா வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டியை அடுத்த திருக்குமரன் நகரில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் (25) ,அவரது நண்பரான பாலசுப்பிரமணியன்(26), ஆரோக்கியதாஸின் தாயாா் முருகேஸ்வரி (50) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், சந்தோஷ்குமாா் 17 ஆம் தேதி இரவு ஆரோக்கியதாஸின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸூம், பாலசுப்பிரமணியனும் சோ்ந்து சந்தோஷ்குமாரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனா்.

பின்னா் சடலத்தை கே.எம்.ஜி.நகரில் உள்ள பாறைக் குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து மண்ணைப் போட்டு மூடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் ராஜ்குமாா் முன்னிலையில் எரிந்த நிலையில் இருந்த சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தனா். மேலும், கொலை வழக்கு தொடா்பாக ஆரோக்கியதாஸ், பாலசுப்பிரமணியன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com