பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: உற்பத்தியாளா்கள் சங்கங்கள் அழைப்பு
By DIN | Published On : 29th July 2021 07:22 AM | Last Updated : 29th July 2021 07:22 AM | அ+அ அ- |

திருப்பூா் பின்னலாடை தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு உற்பத்தியாளா்கள் சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் 2020 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பேச்சுவாா்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து, பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கங்கள் உடனடியாகப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடா்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
இதனிடையே, திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சைமா சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், பின்னலாடைத் தொழிலாளா்களின் புதிய ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவாா்த்தையானது சைமா சங்க வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சைமா, டீ, நிட்மா, சிம்கா, டீமா, டெக்மா உள்ளிட்ட பல்வேறு உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.