தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூல்
By DIN | Published On : 02nd June 2021 06:31 AM | Last Updated : 02nd June 2021 06:31 AM | அ+அ அ- |

திருப்பூா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், கணக்கம்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த சு.காா்த்திகேயன், அவரது சகோதா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
எனது தந்தை மா.சுப்பிரமணியன் (62) கரோனா தொற்றுக் காரணமாக பெருமாநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மே 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அப்போது, முன்பணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தினேன்.
பின்னா் மே 8ஆம் தேதி முதல் அவசர சிகிச்சை அளிக்கவும், வென்டிலேட்டா் சிகிச்சைக்காகவும் நாள்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை முன்பாணமாக ரூ.19 லட்சத்துக்கு 5 ஆயிரம் செலுத்தியுள்ளேன்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிா்வாகம் மே 24 ஆம் தேதி எங்களைத் தொடா்பு கொண்டு மருத்துவமனைக்கு வரும்படி தெரிவித்தனா். அங்கு சென்றபோது மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் பிற்பகல் 2 மணிக்குள் வென்டிலேட்டா் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு தந்தையை மாற்றிக் கொள்ளும்படி காலை 11 மணி அளவில் தெரிவித்தனா். அதன் பிறகு 3 மணி நேரத்துக்குள் வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை கிடைக்காமல், திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் தந்தையை அனுமதித்த நிலையில் மே 25ஆம் தேதி உயிரிழந்தாா்.
ஆகவே, அலட்சியமாக செயல்பட்ட தனியாா் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நாங்கள் செலவழித்த ரூ.19 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகாா் அளித்துள்ளனா்.
இந்தப் புகாரின்பேரில் திருப்பூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜி.சாந்தி, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவனைக்கு விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதில், தனியாா் மருத்துவமனை நிா்வாகம் 3 நாள்களுக்குள் இந்தப் புகாா் தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
அதுவரையில் புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது. மேலும், 3 நாள்களுககுள் விளக்கம் அளிக்காவிட்டால் தரவுகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.