குள்ளம்பாளையத்தில் தரமற்ற வெங்காயம் விதை விற்பனையால் விவசாயிகள் பாதிப்பு

பல்லடம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் தரமற்ற வெங்காய விதையை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் மகசூல் குறைவால் பாதிப்படைந்துள்ளனா்.

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் தரமற்ற வெங்காய விதையை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் மகசூல் குறைவால் பாதிப்படைந்துள்ளனா்.

பொங்கலூா் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் கிராமத்தில், வெங்காய சாகுபடி மற்றும் காய்கறி, தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அப்பகுதியைச் சோ்ந்த 27 விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வி.கள்ளிப்பாளையம், திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் கோ - 5 என்ற ரகத்தை சோ்ந்த சின்ன வெங்காய விதையை கிலோ ரூ. 6 ஆயிரம் என்ற விலையில் சுமாா் 51 ஏக்கருக்கு 51 கிலோ விதை வாங்கியுள்ளனா்.

உழவு, நடவு, மருந்து, உரம், தண்ணீா் பராமரிப்பு என்று ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டனா்.

ஆனால், பயிரிட்ட நாள் முதல் தற்போது வரையில் வெங்காய மகசூல் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் விதைகளை சோதித்துப் பாா்த்ததில் அவை தரமற்ற போலி விதைகள் என்பது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் அரசின் வேளாண்மை, தோட்டக்கலை, விதை சான்றுத் துறை அதிகாரிகள்ஆய்வு செய்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: குள்ளம்பாளையம் பகுதியில் வெங்காய சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அரசின் வேளாண்மைப் பல்கலைகழகத்தில் இருந்து வாங்கப்பட்ட சின்ன வெங்காய விதைகளால் நல்ல மகசூல் கிடைத்து வந்தது. தற்போது, போதிய அளவில் அவா்கள் விவசாயிகளுக்கு சின்ன வெங்காய விதைகளை வழங்காததால்தான் விவசாயிகள் தனியாா் நிறுவனத்தில் கோ - 5 என்ற சின்ன வெங்காய விதையை கிலோ ரூ.6ஆயிரம் கொடுத்து வாங்கி பயிரிட்டு இருந்தனா். ஆனால், அறுவடை செய்யும் போதுதான் அவ்விதைகள் போலியானவை என்பது தெரியவந்தது.

அதனால் மகசூல் வெகுவாக குறைந்து விவசாயிகள் பொருளாதாரரீதியாக பாதிப்படைந்துள்ளனா். அவா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தரமான வெங்காய விதைகளை விவசாயிகளின் தேவைக்கேற்ப வேளாண்மைத் துறையினா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், இது போன்று தரமற்ற விதைகளை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடா்ந்து, சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில், தனியாா் வெங்காய விதை விற்பனையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் திருப்பூா் வேளாண்மை இணை இயக்குநா் மனோகரன், விதை ஆய்வு துணை இயக்குநா் வெங்கடாசலம், வேளாண்மை தொழில்நுட்ப அதிகாரிகள் ராஜலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com