முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அவிநாசியில் அத்திக்கடவு திட்ட குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்
By DIN | Published On : 12th June 2021 06:47 PM | Last Updated : 12th June 2021 06:47 PM | அ+அ அ- |

செம்பகவுண்டம்பாளையம் பிரிவு அருகே பாதியில் நிறுத்தப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்ட குழாய் பதிக்கும் பணி.
அவிநாசி அருகே செம்பகவுண்டம்பாளைம் பிரிவு அருகே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டதால், போராட்டக்குழுவினர், பொதுமக்கள் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1652 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பவானி, பெருந்துறை-நல்லகவுண்டம்பாளையம், பெருந்துறை-திருவாச்சி கிராமம், குன்னத்தூர்- புலநாயன்பாளையம், நம்பியூர்-வரப்பாளையம், அன்னூர்-குன்னத்தூராம்பாளையம் ஆகிய பகுதிகளில் 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, திட்டம் பயன்பெறும் பகுதிகளில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக, அவிநாசி ஒன்றியம், சேவூர் சாலை குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கருமாபாளையம் பகுதியில் பணி முடிவடைந்து தற்போது செம்பகவுண்டம்பாளையம் வழியாக அவிநாசி மடத்துப்பாûளையம் வரை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையோரம் குழி தோண்டப்பட்டு குழாய்களும் போதுமான அளவு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், செம்பகவுண்டம்பாளையம் பிரிவு அருகே குழாய் பதிக்கும் பணி நடைபெறும் போது, ஒரு தரப்பினர் மாற்று தடத்தில் குழாய் பதிக்க வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், போரட்டக்குழுவினர் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து அத்திக்கடவுத் திட்ட அலுவலர்களிடம் கேட்டபோது, உரிய ஆய்வு மேற்கொண்டு, ஒரிரு நாள்களில் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.