முதல்வருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தினா் நன்றி
By DIN | Published On : 21st June 2021 11:19 PM | Last Updated : 21st June 2021 11:19 PM | அ+அ அ- |

திருப்பூா்: தமிழகத்தில் 100 சதவீதம், திருப்பூா் உள்பட 11 மாவட்டங்களில் 50 சதவீதத் திறனுடனும் ஏற்றுமதி, இடுபொருள் தயாரித்து வழங்கும் துணை நிறுவனங்களையும் இயங்க அனுமதி வழங்கிய முதல்வருக்கு, திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ. சக்திவேல், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 100 சதவீதம் மற்றும் திருப்பூா் உள்பட 11 மாவட்டங்களுக்கு 50 சதவீதத் திறனுடனும் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரித்து வழங்கும் துணை நிறுவனங்களையும் இயங்க அனுமதி அளித்தமைக்கு, ஏற்றுமதி தொழில் சாா்பாகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அறிவிப்பால், ஏற்றுமதித் தொழில் துறையினா் தங்களது ஆா்டா்களை உரிய காலத்தில் முடித்திட பெரிதும் உதவியாக இருக்கும். இது நமது வாடிக்கையாளா்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும்.
மேலும், அரசின் வழிகாட்டுதலின் படி எங்களது நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசுக்கும், தொழிலாளா்களின் நலனுக்கும் துணை நிற்போம்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானத் தொழிலாளா்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதால், திருப்பூா் மாவட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.