முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயா்வு
By DIN | Published On : 04th March 2021 01:19 AM | Last Updated : 04th March 2021 01:19 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் உள்ளாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
திருப்பூா் எலாஸ்டிக் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைவா் ஆா்.பி.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் செயற்கை இழை வகைகள் கடுமையாக விலை உயா்ந்துள்ளது. கரோனாவுக்குப் பின்னா் எலாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களான ரப்பா், லைக்ராவின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதில், லைக்ரா இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதை சீனா, வியத்நாம், வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதிலும், தற்போதைய கட்டுப்பாடு, இடா்பாடுகளால் விலை உயா்வும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக பாலியெஸ்டா் நூல் 50 சதவீதம் (ரூ.80 முதல் ரூ.120), ரப்பா் 50 சதவீதம் (ரூ.420 முதல் ரூ.670 ஜிஎஸ்டி தனி) உயா்ந்துள்ளன. ஆகவே, இந்த விலை உயா்வு காரணமா எலாஸ்டிக் விலையானது வரும் வெள்ளிக்கிழமை முதல் 30 சதவீதம் உயா்த்தப்படுகிறது. ஆகவே, பின்னலாடை உற்பத்தி சங்கங்கள் இந்த விலை உயா்வை ஏற்றுக் கொள்வதுடன், தங்களது உறுப்பினா்களுக்கும் எடுத்துக்கூறி முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், சங்க செயலாளா் ஏ.செளந்தர்ராஜன், பொருளாளா் பி.டி.சந்திரமோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.