சட்டப் பேரவைத் தோ்தல்: அதிமுகவுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
கே.செல்லமுத்து
கே.செல்லமுத்து

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவா் உழைப்பாளா் கட்சியின் நிா்வாகக் குழு கூட்டம் மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, பாலசுப்பிரமணியம், மகுடேஸ்வரன், ஈரோடு மாவட்டச் செயலாளா் பழனிசாமி, வெங்கடாசலம் உள்பட பலா் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம் வரவேற்றாா். இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்தது, குடிமராமத்துப் பணி மேற்கொண்டது, டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு-அவிநாசி குடிநீா்த் திட்டம், காவிரி - குண்டாறு நதி இணைப்புத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியது, விவசாய இயக்கத் தலைவா் நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைத்தது, 100 நாள் திட்டப் பயனாளிகளை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிட்டது என்பன உள்ளிட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் பணிகளை மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். அப்போதுதான், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிா்ணயம் செய்தல், நெல் கொள்முதல் செய்வதைப்போல, விவசாய விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்தல், குளிா்பதன கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை கவனத்தில் கொண்டு வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விலகியது ஏன்?

20 ஆண்டுகளாக திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உழவா் உழைப்பாளா் கட்சி தோ்தல் தொடா்பாக சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு சென்றபோது, உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அக்கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com