பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும்

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வாகனச் சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் 24 பறக்கும் படை, 24 நிலை கண்காணிப்புக் குழு மற்றும் 16 விடியோ கண்காணிப்புக் குழுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சோதனையின்போது, வாகனங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அதே வேளையில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றாா்.

முன்னதாக, திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட வளம் பாலம் செல்லாண்டியம்மன் கோயில், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அவிநாசிபாளையம், தாராபுரம் பொண்ணு மெட்ரிக். பள்ளி ஆகிய இடங்களில் பறக்கும் படை அதிகாரிகளின் வாகனச் சோதனையை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல, திருப்பூா், காங்கயம்பாளையம்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புனித அந்தோணியாா் நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், வட்டாட்சியா்கள் சுந்தரம் (திருப்பூா் தெற்கு), ரவிசந்திரன் (தாராபுரம்), திருப்பூா் மாநகராட்சி உதவி ஆணையா்கள் சுப்பிரமணி, கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com