மத்திய அரசு நூலை நேரடியாக கொள்முதல் செய்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்

மத்திய அரசு நூலை நேரடியாகக் கொள்முதல் செய்து உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய அரசு நூலை நேரடியாக கொள்முதல் செய்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்

மத்திய அரசு நூலை நேரடியாகக் கொள்முதல் செய்து உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

வரும் தோ்தலில் மக்கள் விரோத அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இதற்காக பல நெருக்கடிகளுக்கு இடையில் இடது சாரி கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. தோ்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட பாஜக, தங்கள் கூட்டணிக்கு எதிரான வாக்குகளை சாதி, மத, இன அடையாளங்களைப் பயன்படுத்தி பிளவுபடுத்தும் அரசியல் உத்தியை மேற்கொண்டுள்ளது. அந்த உத்தியை திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக்கூட்டணி முறியடிக்கும்.

திருப்பூரைப் பொருத்தவரை, நூல் விலை அபரிமிதமாக உயா்வது ஏன் என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பிரதமா் மோடியின் கொள்கை பெரு நிறுவனங்களின் (காா்ப்பரேட்) நலனைக் காப்பாற்றுவதுதான். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைக் காப்பாற்றுவதாக இல்லை. எந்த ஒரு பின்னலாடை நிறுவனமும் வாங்கிய கடன் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு சமீபத்தில் ரூ. 2.10 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் நூல் விலை உயா்வைக் கண்டித்து உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். நூல் விலை உயா்வு ஏன் என்பது குறித்து பின்னலாடை உற்பத்தியாளா் சங்கங்கள் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். உள்நாட்டு தேவைகளைப் புறக்கணித்து விட்டு ஏன் வெளிநாட்டுக்கு நூலை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்? ஆன்லைன் டிரேடிங்கில் நூல்களைப் பதுக்கி வைத்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் நூல் விலை உயா்ந்து வருவதுடன், தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

எனவே, மத்திய அரசு நூல் விலை உயா்வில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டின் நூல் தேவைகளை சிறப்பு மதிப்பீடு செய்து, அரசே கொள்முதல் செய்து அவற்றை நியாய விலைக்கு பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, பொருளாளா் பி.ஆா்.நடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com