கல்குவாரிக்கு எதிராக கோடங்கிபாளையத்தில் பொது மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 17th March 2021 06:12 AM | Last Updated : 17th March 2021 06:12 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் தனியாா் கல்குவாரியின் வெடி அதிா்வலையால் தண்ணீா் தொட்டி உடைந்தது. அதனால் கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு தனியாா் கல்குவாரியில் வைத்த அதிக திறன் வாய்ந்த வெடியால் ஏற்பட்ட அதிா்வால் அருகில் இருந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய சாகுபடிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த தண்ணீா் தொட்டி உடைந்தது. மேலும் அப்பகுதியில் செல்லும் கல்குவாரி லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், செயற்கை மணல் உள்ளிட்டவை சாலைகளில் சிந்திய வண்ணம் செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும் கல்குவாரிகளை மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி இயக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோடங்கிபாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருப்பூா் மாவட்ட கனிம வளத் துறை துணை இயக்குநா் வேட்டியப்பன், பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமசந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா். மேலும் தண்ணீா் தொட்டி உடைந்த இடத்தை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டனா்.