திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தமிழகம் முழுவதும் பிரசாரம்: இந்து முன்னணி அறிவிப்பு
By DIN | Published On : 17th March 2021 06:09 AM | Last Updated : 17th March 2021 06:09 AM | அ+அ அ- |

திருப்பூரில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம். உடன், மாநிலச் செயலாளா்கள் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், வி.எஸ்.செந்தில்குமாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தமிழகம் முழுவதும் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது:
ஹிந்து மதத்தை ஒழிக்க சா்வதேச சதி நடைபெறுகிறது. இதற்கு பலியாகியுள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நிதி வந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய பின்னணியாக சீனா உள்ளதால் கருத்து சுதந்திரம் என்ற வகையில் நமது பண்பாடு, கலாசாரத்தை அவதூறாகப் பேசி வருகின்றனா்.
திமுக தோ்தல் அறிக்கையில் கோயில் புனரமைப்புக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. கோயில்களுக்கு வரும் வருமானத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோயில்களைப் புனரமைப்பதுடன், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளையும், கல்விக்கூடங்களையும் ஏற்படுத்த முடியும். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறாா்.
தமிழகத்தில் அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்துள்ளனா். இந்த அறிவிப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக கூட்டணியில் திருமாவளவன், கம்யூனிஸ்ட், வைகோ இப்படி சிலா் உள்ளதால் அந்தக் கூட்டணியைத் தோற்கடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21) முதல் ஹிந்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, இந்து முன்னணி மாநிலச் செயலாளா்கள் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், வி.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.