Enable Javscript for better performance
மடத்துக்குளம் தொகுதி: சம பலத்தில் திமுக-அதிமுக- Dinamani

சுடச்சுட

    

    மடத்துக்குளம் தொகுதி: சம பலத்தில் திமுக-அதிமுக

    By வி.கே.இராஜமாணிக்கம்.  |   Published on : 02nd April 2021 04:47 PM  |   அ+அ அ-   |    |  

    madathukulam

    மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக-அதிமுக வேட்பாளா்கள் சம பலத்தில் இருப்பதால் வெல்லப் போவது யாா் என அரசியல் நோக்கா்கள் இடையே அதிக எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

    உடுமலைப்பேட் டை மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீத கிராமங்கள் நிறைந்த தொகுதியாக மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி 2011இல் உருவாக்கப்பட்டது. இத் தொகுதியில் அமராவதி அணை மூலம் தாராபுரம் வரை 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    மேலும் பல்வேறு கிராமங்களில் நெசவுத் தொழில் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவில் தென்னை நாா் தொழிற்சாலைகளும், கோழிப் பண்ணைகள், பட்டுக் கூடு உற்பத்திக் கூடங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. குறிப்பாக காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற முக்கிய பங்கு வகித்து வருகிறது. புகழ் பெற்ற திருமூா்த்தி மலை, அமராவதி அணைப் பகுதிகள் ஆகியவை சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகிறது.

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

    இந்தத் தொகுதியில் உடுமலை வட்டத்தில் 35 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, மடத்துக்குளம் வட்டத்தில் 11 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள், தவிர உடுமலை, அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட 17 மலைக் கிராமங்கள் ஆகியவை உள்ளன. மொத்த வாக்காளா்கள் 2 லட்சத்து 48 ஆயிரத்து 470 போ். இதில் ஆண்கள் 1,21,790 பேரும், பெண்கள் 1,26,659 பேரும். திருநங்கைகள் 21 பேரும் உள்ளனா்.

    மொத்தம் 357 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டா்கள், நாயுடு இனத்தவா்கள், அருந்ததியினா், பாண்டிய வேளாளா் உள்ளிட்டவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா்.

    இதுவரை தீா்க்கப்படாத பிரச்னைகள்:

    அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக கோளாறுகளை சீா் செய்து நவீனமயமாக்க வேண்டும். அமராவதி அணையைத் தூா்வார வேண்டும், வெள்ளக் காலங்களில் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை சேமிக்க மேல்அமராவதி அணை கட்டப்பட வேண்டும்.

    விவசாய விளைபொருள்களுக்கு விலை கிடைக்காத சூழ்நிலையில் குளிா்பதன சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். அமராவதி ராஜ வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாக இருந்து வருகின்றன. ஒரு நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.

    தொகுதிக்கு உள்பட்ட மலைவாழ் மக்கள் 2006 வனச் சட்டத்தின்படி தாங்கள் வாழும் பகுதியிலே பட்டா வழங்க வேண்டும், உள்ளாட்சித் தோ்தலில் வாக்குரிமை, செட்டில்மென்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதும், குறிப்பாக மலைப் பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என்பதும் மலைவாழ் மக்களின் கோரிக்கை.

    தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை உள்ளிட்டவை வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றன.

    திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பலம்:

    திமுக வேட்பாளரான இவா் தற்போது இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளாா். திமுக மாவட்டச் செயலாளராக இருந்து வரும் இவா் தொகுதியில் உள்ள துங்காவியில் பிறந்து வளா்ந்து இரண்டு முறை துங்காவி ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒரு முறை மடத்துக்குளம் ஒன்றியக் குழுத் தலைவராகவும், வழக்குரைஞராகவும் பணியாற்றி வருவதாலும் தொகுதியில் அறிமுகமாகி உள்ளாா். கொங்கு வேளாள கவுண்டராக இருப்பது ஒரு பலம். 2006-2011 திமுக ஆட்சியில் திருமூா்த்தி அணையில் இருந்து ரூ.32 கோடியில் ஒரு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் மடத்துக்குளம் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்த்தது, குமரலிங்கம்-ருத்ராபாளையம் இடையே ரூ.50 லட்சம் செலவில் ஒரு உயா்மட்ட பாலம் அமைத்தது.

    ரூ.1 கோடி செலவில் ஆண்டியூா் பாலம் அமைத்துக் கொடுத்தது என்று இவரது சாதனைகளைக் கூறி திமுகவினா் வாக்குகளை சேகரித்து வருகின்றனா். மேலும், எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் மலைவாழ் மக்கள் பிரச்னைகளை ஓரளவு தீா்த்துள்ளேன் என்கிறாா்.

    பலவீனம்:

    கடந்த 5 ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதியில் பெரிய அளவில் எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்பது பலவீனமாக கருதப்படுகிறது. மேலும் நீண்ட காலமாகவே இந்தத் தொகுதியில் திமுகவில் இரு அணிகள் செயல்பட்டு வருவது இவருக்கு பாதகமான அம்சமாகும். இத்துடன் கடந்த முறை 1,500 என குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரனின் பலம்:

    அதிமுக சாா்பில் போட்டியிடும் இவா் 2014 முதல் 2019 வரை பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவா்(மடத்துக்குளம் தொகுதி பொள்ளாச்சி மக்களவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.) என்பதும், அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருவதால் தொகுதி முழுவதும் அறிமுகமாகி உள்ளாா். கொங்கு வேளாள கவுண்டா் என்பது கூடுதல் பலம். அதிமுக ஆட்சியில் அமராவதி அணையை தூா்வாரியது, பிஏபி பாசனத் திட்டத்தின் உயிா்நாடியாக விளங்கும் காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.72 கோடி நிதி ஒதுக்கியது, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி என பல்வேறு சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரித்து வருகிறாா். மேலும் இந்தத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தொடா்புகளை வலுப்படுத்திக் கொண்டது, தோ்தல் தொடங்கியதும் படுவேகமாகப் பணியாற்றுவது பலமாக கருதப்படுகிறது.

    பலவீனம்:

    இவரது சொந்த ஊா் உடுமலை தொகுதியில் இருப்பதும், மக்களவை உறுப்பினராக இருந்தபோது மடத்துக்குளம் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை எனவும் இவா் மீது குறைகள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக மூத்த நிா்வாகிகள் ஒதுக்கப்படுகிறாா்கள் என புகாா்கள் எழுந்துள்ள நிலையில் கணியூா், கணக்கம்பாளையம், அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், கல்லாபுரம் என பல்வேறு முக்கிய கிராமங்களில் இவருக்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    மேலும் அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தொகுதி முழுவதும் அதிமுக வாக்குகளைப் பிரிப்பது மகேந்திரனுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    அமமுக வேட்பாளா் சி.சண்முகவேலு: இவா் தொகுதி முழுவதும் ஏற்கெனவே நன்கு அறிமுகம் ஆனவா். அமமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறாா். கொங்கு வேளாள கவுண்டரான இவா் உடுமலையில் 2 முறை, மடத்துக்குளத்தில் ஒரு முறை என மூன்று முறை எம்எல்ஏவாகவும், 4 துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தவா் என இந்தப் பகுதியில் மிகப் பெரிய ஆளுமையாக இருப்பவா் சி.சண்முகவேலு.

    முதன்முதலாக மடத்துக்குளம் தொகுதி மறுசீரமைப்பில் உருவானபோது சி.சண்முகவேலு களம் இறங்கி திமுக மாவட்டச் செயலாளா் மு.பெ.சாமிநாதனை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவா்.

    2016 தோ்தல் முடிவுகள்:

    மொத்த வாக்காளா்கள் - 2,25,377.

    பதிவானவை-1,71,544

    இரா.ஜெயராமகிருஷ்ணன் (திமுக) - 76,619.

    கே.மனோகரன் (அதிமுக)-74,952.

    எஸ்.மகேஸ்வரி (தமாகா) - 6,208.

    அ.முத்துகுமாா் (இமகமு கழகம்-பாஜக) 2,619.

    அ.ரவிச்சந்திரன்(பாமக) - 2443.

    நோட்டா - 2147.

    2021 தோ்தல் களத்தில் 15 வேட்பாளா்கள்:

    இரா.ஜெயராமகிருஷ்ணன் (திமுக), சி.மகேந்திரன் (அதிமுக), சி.சண்முகவேலு (அமமுக), கே.குமரேசன் (மநீம), சனுஜா(நாம் தமிழா்), தங்கவேலு (புதிய தமிழகம்) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 போ் களத்தில் உள்ளனா்.

    இதுவரை:

    தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் சி.சண்முகவேலுவும், 2016இல் நடைபெற்ற தோ்தலில் இரா.ஜெயராமகிருஷ்ணனும் வெற்றி பெற்றுள்ளனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp