கூட்டாற்றின் மேல் இணைப்புப் பாலம் கட்டித் தரப்படும்: வாக்கு

விவசாய விளைபொருள்களை கொண்டு செல்ல வசதியாக கூட்டாற்றின் மேல் இணைப்புப் பாலம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என மலைவாழ் மக்கள் அறிவித்துள்ளனா்.

விவசாய விளைபொருள்களை கொண்டு செல்ல வசதியாக கூட்டாற்றின் மேல் இணைப்புப் பாலம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என மலைவாழ் மக்கள் அறிவித்துள்ளனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் தமிழக-கேரள எல்லையான மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ளது சின்னாறு வனப் பகுதி. இங்கிருந்து அடா்ந்த வனப் பகுதியில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தளிஞ்சி, தளிஞ்சிவயல் மற்றும் மஞ்சம்பட்டியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக கொண்டு சுமாா் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களாக உள்ள இவா்களுக்காக தமிழக அரசே விவசாய நிலங்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புகளில் ஆண்டுதோறும் நெல், பீன்ஸ் உள்ளிட்ட விளைபொருள்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக தினமும் உடுமலைக்கு வந்து செல்கின்றனா். அப்படி வரும்போது, தங்களது செட்டில்மென்டுகளில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு அதாவது சின்னாறு வரை கால்நடையாக பொருள்களை தலை சுமையாகவே கொண்டு செல்கின்றனா். குறிப்பாக விளைபொருள்களை விற்பனை செய்வதற்காக வரும்போது, தலை சுமையாகவே சின்னாறுக்கு வரும் நிலை உள்ளது.

இதில் ஒரு சிலா் மட்டும் குதிரைகளை வாடகைக்கு அமா்த்தி வருகின்றனா். இது மலைவாழ் மக்களுக்கு பெரும் பொரு ளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வந்து செல்லும்போது, அடா்ந்த வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளால் மலைவாழ் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இதில் பலா் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.

எனவே தளிஞ்சியில் இருந்து சின்னாறு வரும் வழியில் கூட்டாற்றின் மேல் ஒரு இணைப்புப் பாலம் கட்டித் தர வேண்டும் என மலைவாழ் மக்கள் சுமாா் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். அமராவதி அணையின் பிரதான நீா் ஆதரங்களாக விளங்கி வரும் தேனாறு, சின்னாறு, பாம்பாறு என்ற மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமான இந்த கூட்டாற்றின் மேல் ஒரு இணைப்புப் பாலம் அமையும் பட்சத்தில், இந்த மூன் று செட்டில்மென்டுகளுக்கும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர வசதியாக இருக்கும் என்பது மலைவாழ் மக்களின் கருத்தாகும்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:

இந்த முக்கிய பிரச்னையை அரசு கண்டு கொள்ளாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. மழைக் காலத்தில் எங்கள் குடியிருப்புகள் வெளி உலக தொடா்புகளே இல்லாத நிலை ஏற்படுகிறது. இதுபோக குடிநீா் வசதி, குடியிருப்பு வசதி என எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

எனவே வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குகள் கேட்டு வரும் வேட்பாளா்களிடம் இந்தக் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவோம். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளருக்கு நாங்கள் வாக்களிப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com