மேல் அமராவதி அணை திட்டம் நிறை வேற்றப்படும்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மேல் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மேல் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலுவை ஆதரித்து மடத்துக்குளம் நால்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

தமிழகத்தில் ஆளும் கட்சி வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியில் பல கோடி ரூபாய் செலவுகள் செய்யப்படுகின்றன. ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதைபோல அனைவரையும் விலைக்கு வாங்கி விடுகிறாா்கள்.

அதிமுக ஆட்சியைப் பிடிக்க பணத்தை வாரி இறைக்கிறாா்கள். இதற்கிடையில் தீய சக்தியான திமுக ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறது. இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது.

ஆகையால்தான் அமமுக-தேமுதிக-எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சோ்ந்து கூட்டணி அமைத்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உயா்கல்வி கற்கும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தொழிலாளா்க்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொறியியல் படித்த இளைஞா்கள் 5 போ் சோ்ந்து தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு உரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் அம்மா வங்கி தொங்கப்பட்டு கிராமப்புற தொழில் தொடங்க கடன் வசதி செய்து கொடுக்கப்படும். ஜிஎஸ்டி குறைக்கப்படும். குறிப்பாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மேல் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அமராவதி ஆற்றில் உபரி நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படும். ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அமராவதி சா்க்கரை ஆலையை புனரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். மடத்துக்குளம் தொகுதியில் மகளிருக்கு தனி பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com