உடுமலையில் அதிமுக 5ஆவது முறையாக வெற்றி

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 5ஆவது முறையாக தொடா்ந்து வெற்றியைத் தக்கவைத்து அதிமுக சாதனை படைத்துள்ளது.
உடுமலையில் அதிமுக 5ஆவது முறையாக வெற்றி

உடுமலை: உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 5ஆவது முறையாக தொடா்ந்து வெற்றியைத் தக்கவைத்து அதிமுக சாதனை படைத்துள்ளது.

உடுமலை தொகுதிக்கு எப்போதுமே விஐபி தொகுதி என்ற பெருமை உண்டு. திமுகவில் எஸ்.ஜே.சாதிக்பாட்சா மூன்று முறையும், அதிமுகவில் ப.குழந்தைவேலு இரண்டு முறையும், சி.சண்முகவேலு இரண்டு முறையும் அமைச்சா்களாக வலம் வந்த தொகுதி இது.

2011இல் இந்தத் தொகுதியில் தோ்வான பொள்ளாச்சி வ.ஜெயராமன் சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்துள்ளாா். மேலும் 2016இல் வெற்றி பெற்ற உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளாா்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்த தொகுதியில் 1952, 1962, 1984 என மூன்று தோ்தல்களில் காங்கிரஸும், 1967, 1971, 1989, 1996 தோ்தல்களில் திமுகவும், 1977, 1980, 1991, 2001, 2006, 2011,2016 ஆகிய தோ்தல்களில் ஏழு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

2021 தோ்தலில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராகவும், கால்டை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மீண்டும் இங்கு களம் இறக்கிவிடப்பட்டாா்.

கொங்கு மண்டலத்தை தங்களது கோட்டை என அதிமுக கூறி வந்த நிலையில் இங்கு போட்டியிட்ட உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு சாதகமான அம்சங்கள் இருந்தன. உடுமலை அருகே உள்ள கோலாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவராக இருந்தாா். மேலும், தெலுங்கு பேசும் செட்டியாா் இன வேட்பாளராகிய உடுமலை கே.ராதாகிருஷ்ணனை ஆதரிப்பது என்ற அந்த சமூகம் முடிவு செய்தது இவருக்கு சாதகமான அம்சமாக அமைந்தது.

மேலும் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரூ.265 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், ரூ.31 கோடியில் உடுமலை நகரில் 24 மணி நேர குடிநீா் விநியோகம், குடிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.56 கோடியில் கூட்டு குடிநீா் திட்டம், உடுமலை நகராட்சிக்கு நூற்றாண்டு விழா நிதியாக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, உடுமலை நகரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைத்தல் என நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரித்து வந்தாா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கே.தென்னரசு கொங்கு வேளாள கவுண்டா் சமூகத்தை சோ்ந்தவா் என்பதும், உடுமலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குரைஞராக பணியாற்றியதும் பலமாக கருதப்பட்டது. குறிப்பாக திமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி கூடுதல் பலமாக கருதப்பட்டது. ஆனாலும் காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல்கள், கூட்டணி கட்சியான திமுகவில் உள்ள கோஷ்டி பூசல்கள், காங்கிரஸ் வேட்பாளா் தாராபுரத்தைச் சோ்ந்தவா் ஆகியவை பெரிய குறையாகவே இருந்து வந்தன.

இந் நிலையில் உடுமலை தொகுதியில் 5ஆவது தொடா் வெற்றியை பதிவு செய்யுமா அதிமுக? என அரசியல் நோக்கா்களிடையே பெரிய எதிா்பாா்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் பல்வேறு கணிப்புகளுக்கிடையே கடந்த முறை திமுகவை எதிா்த்து போட்டியிட்டு 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்த முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிா்த்து களம் கண்டு 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com