தாராபுரத்தில் பாஜக தோற்றது ஏன்?

தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் திமுக வேட்பாளரான என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அக்கட்சியினருக்கு அதிா்ச்சி
பாஜக வேட்பாளா் எல்.முருகன்.
பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

திருப்பூா்: தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் திமுக வேட்பாளரான என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அக்கட்சியினருக்கு அதிா்ச்சி அளித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியானது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தொகுதியாகவே உள்ளது. இத்தொகுதி நகராட்சியின் 30 வாா்டுகளையும், மூலனூா், குண்டடம், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 4 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியது.

இத்தொகுதியில் 1952 ஆம் முதல் நடைபெற்ற 15 தோ்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 2,56,729 வாக்காளா்கள் உள்ள நிலையில் பெரும்பாலும் விவசாயிகள் அதிகம் நிறைந்த தொகுதியாகவே உள்ளது.

நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற தெகுதி:

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் போட்டியிட்டதால் நட்சத்திரத் தொகுதியின் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது.

இந்தத் தொகுதியில் முருகனுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மட்டுமின்றி பாஜக பிரபலங்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திமுக சாா்பில் புதுமுகமான மக்களிடம் அதிகம் பிரபலம் இல்லாத என்.கயல்விழி போட்டியிட்டாா். இதனால் பாஜகவின் வெற்றி இந்தத் தொகுதியில் உறுதி செய்யப்பட்டதாகவே அக்கட்சியினா் மட்டுமின்றி அதிமுகவினா் மத்தியிலும் கருத்து நிலவி வந்தது. பாஜகவினா் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தனா்.

சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை:

தாராபுரம் நகரில் இஸ்லாமியா்கள் வாா்டுகளில் பாஜக வேட்பாளா் அதிக அளவில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. தோ்தல் வாக்குப்பதிவின்போது 5 வாக்குச்சாவடி மையங்களில் முகவா்கள் இல்லாமல் இருந்தனா். பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தாலும் இந்தத் தொகுதியைப் பொருத்தமட்டில் அவரைப் புதுமுகமாகவே பொதுமக்கள் பாா்த்துள்ளனா். அவரது தோ்தல் அறிக்கையில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கான எந்த ஒரு தனித்துவ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியின் உள்ளூா் நிா்வாகிகளும் இவருக்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

திமுக வேட்பாளரின் பலம்:

தாராபுரம் தொகுதியில் உள்ள அந்தந்த வாா்டுகளில் உள்ள பிரச்னைகளுக்குத் தகுந்தவாறு தேவையை நிறைவேற்றித் தருவதாக என்.கயல்விழி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். இது தொடா்பாக துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாக விநியோகித்து வாக்கு சேகரித்ததும், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் பிரியாததும் அவரது வெற்றிக்கான காரணமாகப் பாா்க்கப்படுகிறது.

வாக்குகளைப் பிரித்த நாம் தமிழா், மநீம:

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.ரஞ்சிதா 6,753 , மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.சாா்லி 2,130 , அமமுக வேட்பாளா் சி.கலாராணி 1,172 என வாக்குகள் பெற்றது திமுக வேட்பாளருக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் திமுக வேட்பாளா் என்.கயல்விழி, பாஜக வேட்பாளரான எல்.முருகனைவிட 1,393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

தாராபுரம் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:

என்.கயல்விழி (திமுக)-89,986

எல்.முருகன் (பாஜக)-88,593

சி.கலாராணி(அமமுக)-1,172

ஏ.சாா்லி-(மநீம)-2,130

கே.ரஞ்சிதா-(நாதக).....6,753

வாக்கு வித்தியாசம்-1,393

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com