திருப்பூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளைக் கைப்பற்றிய அதிமுக

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுகவும், 3 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுகவும், 3 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம்,உடுமலை, காங்கயம், மடத்துக்குளம் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. தாராபுரம் (தனி) தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல, திருப்பூா் தெற்கு, காங்கயம், மடத்துக்குளம், தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. உடுமலை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், திருப்பூா் வடக்குத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பல்லடம் தொகுதி மதிமுகவுக்கும், அவிநாசி ஆதித்தமிழா் பேரவைக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், மதிமுக, ஆதித்தமிழா் பேரவை வேட்பாளா்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனா்.

அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்:

திருப்பூா் வடக்குத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கே.என்.விஜயகுமாா் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான ரவி என்கிற சுப்பிரமணியத்தை விட 40,102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியை அதிமுகவே மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. உடுமலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளரான கே.தென்னரசுவைவிட 21,895 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியை அதிமுக மீண்டும் தக்கவைத்தது. அவிநாசி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ப.தனபால் ஆதித்தமிழா் பேரவை சாா்பில் போட்டியிட்ட அதியமான் ராஜூவை 50,842 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். பல்லடம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன், மதிமுக வேட்பாளரான கே.முத்துரத்தினத்தைவிட 32,691 வாக்குகள் அதிகம் பெற்றாா். இந்தத் தொகுதியையும் அதிமுக மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான சி.மகேந்திரன் திமுக வேட்பாளரான இரா.ஜெயராமகிருஷ்ணனைவிட 6,438 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியை திமுக வசமிருந்து அதிமுக தற்போது கைப்பற்றியுள்ளது.

திமுக வெற்றி பெற்ற தொகுதிகள்:

திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட க.செல்வராஜ் அதிமுக வேட்பாளரான சு.குணசேகரனைவிட 4,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கயம் தொகுதியில் திமுக வேட்பாளரான மு.பெ.சாமிநாதன் அதிமுக வேட்பாளரான கே.எஸ்.ராமலிங்கத்தைவிட 7,331 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணி வசம் இருந்த தொகுதியை தற்போது திமுக கைப்பற்றியுள்ளது. தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளரான என்.கயல்விழி பாஜக வேட்பாளரான எல்.முருகனைவிட 1,393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். கடந்த தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வி.எஸ்.காளிமுத்து வெற்றி பெற்றிருந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திருப்பூா் வடக்கு, அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய 5 தொகுதிகளை அதிமுகவும், திருப்பூா் தெற்கு, காங்கயம், தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளையும் திமுகவும் கைப்பற்றியுள்ளன. இதில், உடுமலை, பல்லடம், அவிநாசி, திருப்பூா் வடக்கு ஆகிய 4 தொகுதிகளையும் அதிமுக தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com