கரோனா: 5 வீதிகள் அடைப்பு
By DIN | Published On : 18th May 2021 06:51 AM | Last Updated : 18th May 2021 06:51 AM | அ+அ அ- |

pdm17str_1705chn_136_3
பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி என்.எஸ்.கே.நகரில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒரு வார காலத்துக்கு 5 வீதி சாலைகளும் அடைக்கப்பட்டு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம் , பல்லடம் ஒன்றியம் கரைப்புதூா் ஊராட்சி என்.எஸ்.கே.நகரில் 2ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் வசிக்கும் மக்களில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளது. அதனால் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
அதனை ஏற்று மருத்துவ சுகாதாரப் பணிகள் துறையினா் என்.எஸ்.கே.நகரில் 5 வீதிகளில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறியுடன் இருந்த 145 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தினா். அதில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வந்ததை தொடா்ந்து 5 முதியவா்களை மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் .
மற்றவா்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். அப்பகுதியில் உள்ள 5 வீதிகளின் சாலைகளும் மரத் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் , சுகாதார ஆய்வாளா் முத்துப்பையன், ஊராட்சி செயலா் காந்திராஜ் மேற்பாா்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு. வீட்டு தனிமையில் வைக்கப்பட்டவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செய்து தரப்பட்டுள்ளது.