திருப்பூா் இளைஞரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
By DIN | Published On : 18th May 2021 06:49 AM | Last Updated : 18th May 2021 06:49 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா், ராக்கியாபாளையத்தைச் சோ்ந்த இளைஞரிடம் என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
கேரள மாநிலம் கொச்சியைச் சோ்ந்த என்.ஐ.ஏ. ஆய்வாளா் ஸ்ரீ காந்த் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் வந்தனா். இதன் பிறகு திருப்பூா், ராக்கியாபாளையத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞரிடம் மதுரை வழக்கு தொடா்பாக 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனா். இதன் பிறகு அந்த இளைஞரை விடுவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: மத கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சில கருத்துகளை ஒருவா் பதிவு செய்தாா். இதுதொடா்பாக மதுரையைச் சோ்ந்த முகமது இக்பால் (25) உள்பட மூவரை திடீா் நகா் காவல் துறையினா் கைது செய்திருந்தனா். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு ஒரு ஆண்டாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இக்பாலின் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் திருப்பூா் இளைஞா் இருப்பது தெரியவந்தது. ஆகவே, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரிடமிருந்து இரு செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.