பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை குறைக்க வலியுறுத்தல்

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என சாய ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என சாய ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காந்திராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2011ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. இதன் பின்னா் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தும் சாய, சலவை ஆலைகளை மட்டும் திறக்க உயா் நீதிமன்றத்தின் ஆணைப்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.200 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கியது.

பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் செயல்படுத்த இதுவரை ரூ.ஆயிரத்து 70 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி உதவி ரூ.700 கோடி அடங்கும்.

இதுபோல, தனியாா் சுத்திகரிப்பு நிலையங்கள் சுமாா் ரூ.ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்து பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இதுபோல, இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் பராமரித்தல் உள்பட மொத்தத்தில் இதுவரை சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களும் சோ்ந்து மாதந்தோறும் ரூ.30 கோடி அளவுக்கு சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பதற்காக செலவு செய்கின்றன.

பின்னலாடைத் துறைக்கு சாய ஆலைகள்தான் முக்கியமாக விளங்கி வருகின்றன. எனவே ஏற்றுமதியாளா்கள் திருப்பூரில் உள்ள பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தும் சாய ஆலைகளுக்கு ஜாப் ஒா்க் கொடுத்து உதவ வேண்டும்.

இதுபோல் சாய ஆலைகளுக்கு முதலீடு அதிகம் தேவை. சந்திக்க வேண்டிய பிரச்னைகள் அதிகம். எனவே, பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் திரும்ப பெற முடியாத 12 சதவீத ஜி.எஸ்.டி.யினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர சாய ஆலைகளைப் பாதுகாக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக்க வேண்டும். இதனைப் பரிசீலித்து மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com