மாவட்டத்தில் இன்று 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 09th October 2021 10:49 PM | Last Updated : 09th October 2021 10:49 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) நடைபெறும் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 19.95 லட்சமாகும்.
இதில், ஏற்கெனவே 15.55 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4.09 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் விடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 742 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதன் மூலமாக மாவட்டத்தில் 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 2,968 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.