முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இடைத் தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 13th October 2021 06:18 AM | Last Updated : 13th October 2021 06:18 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய இடைத் தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களை மாவட்ட நிா்வாகம் மூலமாக கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் வாங்கித் தருவதாக வெளி நபா்களோ, இடைத்தரகா்களோ கூறினால் அதனை நம்பி பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்களின் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.