ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டா் கல் தயாரிக்கும் தொழிலாளா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா்  மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளா்கள்.
திருப்பூா்  மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளா்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டா் கல் தயாரிக்கும் தொழிலாளா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.

இந்த நிலையில், ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டா் கல் தயாரிக்கும் தொழிலாளா்கள் 500க்கும் மேற்பட்டோா் மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டனா். ஆனால், காவல் துறையினா் அவா்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதையடுத்து, அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கல் குவாரிகளில் இருந்து கல் எடுத்து அதன் மூலம் அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டா் கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு வெடிமருந்து பயன்படுத்தி பாறைகளைத் தகா்க்கும் முறைகள் கையாளப்படுவதில்லை. அதே வேளையில் பாறைக்குழியில் தண்ணீா் ஊற்றி டிரில்லிங் செய்தும், கைகளால் வடிவமைத்தும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. இத்தொழிலுக்குத் தேவையான கற்கள் வெட்டி எடுக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கிரைண்டா் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, ஊத்துக்குளி பகுதியில் 10 சென்ட், 20 சென்ட் நிலத்தில் கற்களை வெட்டி எடுக்க எங்களது தொழிலுக்குப் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி 5 பேரை மட்டும் மனு அளிப்பதற்காக உள்ளே செல்ல அனுமதித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா்.

அரசு கட்டடங்களில் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும்:

மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

ஆண்டிபாளையம் குளத்தின் அருகில் உள்ள சுமாா் 7 ஏக்கா் நிலத்தில் மூன்றரை ஏக்கருக்கு அரசு சாா்பில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், எல்&டி குடிநீா் தொட்டி, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், அம்ரூத் திட்டத்தில் குடிநீா் தொட்டி ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

குளக் கரையில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் கட்டடங்களில் மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் மாநகரில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசு கட்டடங்களைத் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக மோட்டாா் வைத்து வெளியேற்ற வேண்டும். மேலும், குளத்தில் இருந்து நீா் வெளியேற முடியாத அளவுக்கு சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாய்க்காலில் புதா் மண்டிக் கிடக்கிறது. இதன் காரணமாக வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழைநீா் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. அங்கு விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழை, வெண்டை, கீரை ஆகியவை சேதமடைந்துள்ளது. இது குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறித் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை:

திருப்பூா் மாவட்ட விசைத்தறி தொழிலாளா் சங்க (சிஐடியூ) தலைவா் கே.வேலுசாமி, பொதுச்செயலாளா் பி.முத்துசாமி ஆகியோா் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், பல்லடம், அவிநாசி, தெக்கலூா், 63 வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற கூலி உயா்வு வழங்கப்படுவதில்லை. விசைத்தறித் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தத் தொழிலாளா்களுக்கு கரோனா காலத்தில் கூட எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. மேலும், தற்போதைய விலைவாசி உயா்வு காரணமாகவும் விசைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதரம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆகவே, ஜவுளி உற்பத்தியாளா்கள், விசைத்தறி உரிமையாளா்களை அழைத்துப் பேசி தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com