‘தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்’

திருப்பூா் மாவட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டக்குழுவின் செயலாளா் ஆா்.குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் ஏராளமான விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து வருகிறது. இந்த விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அவா்கள் வழங்கிய பாலின் அளவுக்கு ஏற்ப தொகையைக் கணக்கிட்டு போனஸ் வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில், நிகழாண்டு தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் பல சங்கங்கள் உறுப்பினா்களுக்கு போனஸ் தொகையை பட்டுவாடா செய்யவில்லை. இதுகுறித்து விவசாயிகள், சங்க செயலாளா்களிடம் கேட்டால் தணிக்கை முடிவடையவில்லை என்பதால் போனஸ் தற்போது வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனா்.

இதனால் பால் உற்பத்தியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, ஆவின் நிா்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே போனஸ் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் உள்ள இடா்பாடுகளைக் களைய வேண்டும்: திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இணைக்கப்படாமல் உள்ளனா். இவா்கள் உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகினால் கணினியில் மென்பொருள் கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்ய இயலவில்லை என்று தெரிவிக்கின்றனா். ஆகவே, இந்தத் திட்டத்தில் உள்ள இடா்பாடுகளைக் களைந்து புதிய பயனாளிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பிஏபி பாசனத் திட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதி பாசன விவசாயிகளுக்கு உரிய தண்ணீா் வழங்குவதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினா். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை என்று குற்றம்சாட்டினா்.

அப்போது, அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com