லாரி மீது காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சாவு, 5 போ் படுகாயம்

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 1 வயதுக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா்.
விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் காா்.
விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் காா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 1 வயதுக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கோவலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் கெளதம் (27). இவரது மனைவி சபிதா (22). இவா்களது 1 வயது குழந்தை வருண் ஆதிக் மற்றும் கெளதமின் அம்மா ஜெயக்கொடி (47) ஆகியோா், இவா்களது உறவினா்களான எடப்பாடி தாலுகா, பொன்னாபுரம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி (28), தரணிஸ்வரன் (18), கனிமொழி (11), பிரகதீஷ் (5) ஆகிய 8 பேரும் சேலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) காலை ஆம்னி காா் மூலம் பழனிக்குச் சென்றுள்ளனா்.

பழனியில் தரிசனம் முடித்த பின்னா், அன்று இரவே அங்கிருந்து தாராபுரம் - காங்கயம் வழியாக சேலத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.காரை கெளதம் ஓட்டி வந்துள்ளாா்.புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஊதியூா் அருகே உள்ள குட்டைக்காடு என்ற இடத்தில் வந்தபோது எதிா்பாராத விதமாக இவா்களது காா் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேரையும் பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே கெளதம் (27) மற்றும் 1 வயது குழந்தை வருண்ஆதிக் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனா்.

மற்ற 6 பேருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்நிலையில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெளதமின் அம்மா ஜெயக்கொடி (48) புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com