சிக்கண்ணா அரசு கல்லூரியில் இளநிலைபட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th September 2021 11:46 PM | Last Updated : 11th September 2021 11:46 PM | அ+அ அ- |

திருப்பூா் சிக்கண்ணாஅரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 8 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், கணிதம் (42), கணினி அறிவியல் ஷிப்ட் 1 (4), ஷிப்ட் 2 (25), கணினி பயன்பாட்டியல் (7), வேதியியல் (1), இயற்பியல் (6), விலங்கியல் (11) ஆகிய வகுப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் மாணவா்களிடம் இருந்து நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதில், விண்ணப்பிக்க ரூ. 50ஐ கட்டணமாகச் செலுத்தி செப்டம்பா் 13 முதல் 15ஆம் தேதி வரையில் காலை 11 முதல் 4 மணி வரையில் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 16, 17 ஆம் தேதிகளில் காலை 11 மணிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதில், விண்ணப்பித்த அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 4ஆவது கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 20ஆம் தேதிநடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்களையும், அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். மேலும், கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், 6 பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.