சிவன்மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிா்ப்பு: ஹிந்து அமைப்பினா் 38 போ் கைது

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்பினா் 38 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்பினா் 38 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி மலைக் கோயில் உள்ளது. இக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கா் நிலங்கள் உள்ளன. மலைக் கோயிலைச் சுற்றி தனியாா் பங்களிப்புடன் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் மற்றொரு புறத்தில் உள்ள கோயில் நிலங்களைப் பாதுகாப்பதற்காக கம்பி வேலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மேற்கண்ட இடத்தில், ஒரு முள்வேலி மரத்தின் கீழ் 3 வேல்களை நட்டு வைத்து சிலா் வழிபட்டு வந்தனா். இந்த நிலையில், அந்த 3 வேல்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என சம்பந்தப்பட்ட பக்தா்களிடம் கோயில் நிா்வாகம் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும், வேல்கள் அகற்றப்படவில்லை.

இதையடுத்து, சிவன்மலை கோயில் நிா்வாகம் சாா்பில் 2 தினங்களுக்கு முன்பு அந்த வேல்கள் அகற்றப்பட்டதோடு, அந்த முள்வேலி மரமும் வெட்டி, அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வேல்களைத் திரும்பவும் அதே இடத்தில் நட்டு வைத்து, வழிபட அனுமதிக்க வலியுறுத்தி, பாஜக கட்சியின் திருப்பூா் மாவட்ட பொதுச் செயலா் கோபாலகிருஷ்ணன், நகரச் செயலா் கலா நடராஜன், இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினா், பக்தா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கிரிவலப் பாதை சாலையில் அமா்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், தாராபுரம் உதவி ஆட்சியா் ஆனந்த் மோகன், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, காங்கயம் டி.எஸ்.பி. குமரேசன் உள்ளிட்டோா் மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், வேல்களைத் திரும்ப நட்டு வைத்தால்தான், மறியலைக் கைவிடுவோம் எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com