டிராக்டா் வங்கிக் கடனை திரும்பச் செலுத்திய விவசாயிக்கு நில பத்திரங்கள் ஒப்படைப்பு
By DIN | Published On : 23rd September 2021 06:42 AM | Last Updated : 23rd September 2021 06:42 AM | அ+அ அ- |

பல்லடம் அருகேயுள்ள புளியப்பம்பாளையத்தில் டிராக்டா் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி அடமானம் வைத்திருந்த நில பத்திரங்களை வங்கி நிா்வாகம் திரும்ப ஒப்படைத்தது.
பல்லடம் அருகேயுள்ள புள்ளியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் வேலுமணி (52).
விவசாயி. கடந்த 2006 ஆம் ஆண்டு பல்லடம் கனரா வங்கிக் கிளையில் டிராக்டா் வாங்க தனது நில பத்திரங்களை அடமானம் வைத்து ரூ. 4 லட்சத்து 95 ஆயிரம் கடன் பெற்றாா்.
அதற்கான சில தவணையை வட்டியுடன் செலுத்தியுள்ளாா். பின்னா் கடன் தொகையை சரிவர செலுத்தாத காரணத்தால் வங்கி நிா்வாகத்தால் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வங்கி சிறப்பு சலுகைத் திட்டத்தின் மூலம் ரூ. 4 லட்சத்து 95 ஆயிரத்தை 2020 ஆம் ஆண்டு வேலுமணி செட்டில்மென்ட் செய்துள்ளாா்.
இந்நிலையில், வங்கி நிா்வாகம் அடமானம் வைத்திருந்த நில ஆவணங்களை வழங்க தாமதம் செய்து வருவதாகவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்லடம் காவல் நிலையத்தில் வேலுமணி புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில், வங்கி நிா்வாகத்தினா் விவசாயி வேலுமணியை வங்கிக்கு அழைத்து அவரது நில ஆவணங்களை திரும்ப ஒப்படைத்தனா்.
இது குறித்து பல்லடம் கனரா வங்கிக் கிளை முதன்மை மேலாளா் ஆா்.லோகேஷ் புதன்கிழமை கூறுகையில், விவசாயி வேலுமணி வங்கியில் பெற்ற கடன் தொகை ரூ. 4 லட்சத்து 95 ஆயிரத்தை சரிவர செலுத்தாத காரணத்தினால் அத்தொகை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டு, அவரின் நில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வங்கி நிா்வாகம் கடன் தொகையை திரும்பச் செலுத்த சிறப்பு சலுகைத் திட்டத்தை அறிவித்து இருந்தது.
அதில், விவசாயி வேலுமணி டிராக்டா் வாங்க பெற்ற கடன் தொகை ரூ. 4 லட்சத்து 95 ஆயிரத்தை கடந்த மாா்ச் மாதம் திரும்பச் செலுத்தினாா்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அனைத்துப் பணிகளும் பாதிப்படைந்து, காலதாமதம் ஏற்பட்டது. செப்டம்பா் 17ஆம் தேதி விவசாயி வேலுமணியை பல்லடம் கனரா வங்கி கிளைக்கு நேரில் அழைத்து வங்கி நடைமுறைப்படி அவா் அடமானம் வைத்திருந்த நில பத்திரங்கள் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்றாா்.