விலை வீழ்ச்சியால் பாதிப்பு: வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

 திருப்பூரில் வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விலை வீழ்ச்சியால் பாதிப்பு: வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

 திருப்பூரில் வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெங்காய விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தக் கோரி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞா் அணி ஆகிய அமைப்பினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெங்காயத்தை தரையில் கொட்டி ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் குண்டடம் ராசு தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் வெங்காயம் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், வெங்காயம் தற்போது கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1.40 லட்சம் செலவாகும் நிலையில் தற்போதைய விலையின்படி ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்டமுடியாமலும், அடுத்த சாகுபடிக்குத் தேவையான உரம், இடுபொருள்களை வாங்கமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

வெங்காய விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு கூட்டுறவுத் துறை மூலமாக குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.40க்கு கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதேபோல, மத்திய அரசு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றனா். இதைத் தொடா்ந்து அவா்கள், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் மனு அளித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சிசாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம், மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன், மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி, மாநில துணைத் தலைவா் கே.பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com