திருப்பூர் புத்தகத் திருவிழா ஏப். 14-ல் தொடக்கம்

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வரும் வியாழக்கிழமை (ஏப்.14) தொடங்குகிறது.
புத்தகத் திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் வரவேற்புக்குழுத் தலைவர் வழக்குரைஞர் பி.மோகன்.
புத்தகத் திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் வரவேற்புக்குழுத் தலைவர் வழக்குரைஞர் பி.மோகன்.

திருப்பூர்: திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வரும் வியாழக்கிழமை (ஏப்.14) தொடங்குகிறது.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆர். சிட்டி சென்டரில் 18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் வழக்குரைஞர் பி.மோகன் கூறியதாவது:

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், சென்னை பாரதி புத்தகாலயம் ஆகியன இணைந்து திருப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று காரணமாக புத்தகத் திருவிழா நடைபெறவில்லை. இதனிடையே, நிகழாண்டு 18-ஆவது புத்ததகத் திருவிழா வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதி வரையில் 11 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியை ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெசாமிநாதன் தொடக்கிவைக்கிறார். இதில், முதல் விற்பனையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடக்கி வைக்க மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார், துணைமேயர் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த விழாவுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தலைமை வகிக்கிறார். இந்தக் கண்காட்சியானது வார நாள்களில் 3 மணி முதல் 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதில், சாகித்திய அகாதெமி, பாரதி, உயிர்மை, விகடன், கதிழக்கு, எதிர், என்சிபிஎச், தமிழினி, நன்றிணை, வம்சி, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட 36 பதிப்பகங்கள், விற்பனை நிலையங்கள் என 94 நிறுவனங்கள் சார்பில் 95 அரங்குகளில் அமைக்கப்படவுள்ளன. இதில், கதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படவுள்ளன.

அதே வேளையில், நாள்தோறும் மாலை வேளைகளில் கலை, இலக்கிய பண்பாட்டு கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையிலும் மொத்தமாக புத்தகங்களை வாங்கும் நபர்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது என்றார்.

இந்த சந்திப்பின்போது, புத்தகத்திருவிழா வரவேற்புக்குழு இணைச் செயலாளர் ச. நந்தகோபால், செயலாளர் ஆர். ஈஸ்வரன், துணைத் தலைவர் வி. பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com