திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்னா
By DIN | Published On : 18th April 2022 01:42 PM | Last Updated : 18th April 2022 01:42 PM | அ+அ அ- |

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்ட மகாலட்சுமி நகர் பகுதி பொதுமக்கள்.
திருப்பூர்: திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பாக தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இடுவம்பாளையம் மகாலட்சுமி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 30-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீரை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, எங்களது பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்க வந்தபோது அவர் இல்லாததால், வேறு வழியின்றி தர்னாவில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.