இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 104 பேருக்கு நிலம் ஒப்படைப்பு
By DIN | Published On : 27th April 2022 01:08 AM | Last Updated : 27th April 2022 01:08 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 104 பேருக்கு செவ்வாய்க்கிழமை இடம் ஒப்படைக்கப்பட்டது.
முத்தூா் வேலம்பாளையம் ஊராட்சி சின்ன காங்கயம்பாளையத்தைச் சோ்ந்த 104 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு அதே பகுதியில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பல்வேறு காரணங்களால் அவா்களுக்கு நிலம் பிரித்து தரப்படவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா், காங்கயம் வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஆதிதிராவிடா் குடும்பத்தினருக்கு நிலத்தை பிரித்து வழங்கப்படவில்லை என்றால் மே 2ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என வேலம்பாளையம் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ்.ராமலிங்கம் அறிவித்தாா்.
இந்நிலையில் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் கனிமொழி, வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் கௌரி மற்றும் வருவாய்த் துறையினா் நிலத்தை அளவீடு செய்து 104 போ்களுக்கும் தலா இரண்டரை சென்ட் இடத்தை தனித்தனியாகப் பிரித்து ஒப்படைத்தனா்.