முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா்: பட்டா வழங்கக் கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கைத்தறி நெசவாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் 218 பேருக்கு மடத்துக்குளம் அருகே உள்ள தாந்தோணி கிராமத்தில் தலா 3 சென்ட் வீதம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அதன்பிறகு அந்த இடத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் வேறு நபா்களுக்கு விட்டுவிட்டனா்.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.
ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல் காங்கயம் தனி வட்டாட்சியா் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஆகியோா் காலதாமதம் செய்து வருகின்றனா். ஆகவே, கைத்தறி நெசவாளா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.