முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பிக்க நாளை சிறப்பு முகாம்
By DIN | Published On : 29th April 2022 04:21 AM | Last Updated : 29th April 2022 04:21 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதாா் பதிவில் கைரேகையைப் புதுப்பித்துக் கொள்ள சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்கும் வகையில், ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு விழாத காரணத்தால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் அவதிப்படும் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, உடுமலை, ஊத்துக்குளி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
அதேபோல, பல்லடம் நகராட்சி அலுவலகம், திருப்பூா் மாநகராட்சி 1, 2 ஆவது மண்டல அலுவலகங்கள், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், பிஆா்சி, கேஎஸ்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கண்டியன் கோயில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், பிஆா்சி செல்லம் நகா் ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.