முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கஞ்சா, ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
By DIN | Published On : 30th April 2022 11:13 PM | Last Updated : 30th April 2022 11:13 PM | அ+அ அ- |

திருப்பூரில் கஞ்சா விற்பனை, ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் டி.அருண் (25). இவா் திருப்பூா், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தாா். தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்தது தொடா்பாக நல்லூா் காவல் துறையினா் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அருணை கைது செய்தனா். இவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்திருந்தனா்.
இந்த நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருணிடம் நல்லூா் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.
ஆள் கடத்தல் வழக்கில் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்கண்ணன் (52). இவா் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டம், செங்கப்பள்ளியில் கெமிக்கல் குடோன் நடத்தி வருகிறாா்.
சுரேஷ் கண்ணன், செங்கப்பள்ளி நான்கு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த மாா்ச் 7 ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது காரில் வந்த இருவா் வழிகேட்பதுபோல நடித்து சுரேஷ் கண்ணனைக் கடத்தியுள்ளனா். பின்னா் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
இதனால் அச்சமடைந்த சுரேஷ்கண்ணன் கடையின் சாவியைக் கொடுத்து ஊழியா் தனசிங்கிடம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கொடுப்பாா் என்று தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சுரேஷ் கண்ணனை பெருந்துறை புறவழிச் சாலையில் இறக்கிவிட்டுவிட்டு கடைக்கு வந்து ரூ.2 லட்சத்தை பறித்துச் சென்றனா். இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த எட்வா்டு (55), சேகா் (42) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள் இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் பரிந்துரை செய்திருந்தாா். இந்தப் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.