முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மயானத்தில் சுகாதார மையம் கட்ட பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 30th April 2022 11:15 PM | Last Updated : 30th April 2022 11:15 PM | அ+அ அ- |

திருப்பூா் முருங்கப்பாளையம் மயானத்தில் சுகாதார மையம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பூா் அருகே மயானத்தில் மரங்களை வெட்டி சுகாதார மையம் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி, 27ஆவது வாா்டுக்கு உள்பட்ட முருங்கப்பாளையத்தில் உள்ள மயானத்தில் சுகாதார நிலையம் கட்டுவதற்காக அங்குள்ள பழமையான மரங்களை மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இரவு வெட்டியுள்ளனா். இது குறித்து தகவலறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோா் மயானத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறியதாவது:
முருங்கப்பாளையம் மயானத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்திலேயே சுகாதார மையம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டியதுடன், மரங்களையும் வெட்டியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். மேலும், மயானத்துக்கு அருகில் உள்ள பங்களா பேருந்து நிறுத்தத்தில் ஏற்கெனவே மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. ஆகவே, மயானத்தில் சுகாதார மையம் கட்டும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.