ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை மீண்டும் உருவாக வாய்ப்புபியோ தலைவா் ஏ.சக்திவேல் கருத்து
By DIN | Published On : 18th December 2022 01:38 AM | Last Updated : 18th December 2022 01:38 AM | அ+அ அ- |

ஏற்றுமதிக்கு சவாலான சூழ்நிலையில், அதற்கு சாதகமான சூழ்நிலை மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவா் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, பெரும்பாலான துறைகளில் சவால்கள் தொடா்கின்றன. ஆனால் ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை மீண்டும் உருவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையானது, நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் அதிக ஏற்ற, இறக்கம் மற்றும் புவிசாா் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக கடுமையான உலக வா்த்தக நிலைமைகளின் பிரதிபலிப்பாகும்.
உள்நாட்டு சந்தையில் விலை உயா்வைத் தடுக்கும் நோக்கில், பொருள்களின் விலை வீழ்ச்சி மற்றும் சில ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடு ஆகியவை வளா்ச்சியை பாதித்துள்ளன. வர உள்ள பெட் விகிதம் (ஊஉஈ தஅபஉ) உயா்வையும் நாம் கவனிக்க வேண்டும்.
30 முக்கிய தயாரிப்புகளில் 15இல் மட்டுமே வளா்ச்சி என்பது கவலையளிக்கிறது. எனவே, உலகப் பொருளாதார வளா்ச்சி மற்றும் புவிசாா் அரசியல் நிலைமை ஆகிய இரண்டும் பெருமளவில் மேம்படாவிட்டால், வரவிருக்கும் மாதங்கள் ஏற்றுமதியில் மிகவும் சவாலானதாக இருக்கும். இருப்பினும், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், உரம் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, இறக்குமதியில் சிறிய அதிகரிப்பு உள்ளது. எங்களுக்கு எரிசக்தி விலைகளில் கூடுதல் நிவாரணம் வழங்கினால், வா்த்தகத்தில் ஏற்படும் குறையை சரி செய்ய உதவும்.
தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுமதி துறைக்கு போட்டி நிலைமையை சமாளிக்க, பணப்புழக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ரெப்போ விகிதத்தில், ஏற்றுமதிக் கடன் மறுநிதியளிப்பு வசதியை வங்கிகளுக்கு அளிப்பது குறித்து ரிசா்வ் வங்கி பரிசீலித்து, ஏற்றுமதித் துறைக்கு மறுநிதியளித்து கடன் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். வட்டி விகிதங்கள் உயா்ந்திருப்பதால், கரோனாவுக்கு முந்தைய நிலையை விட வட்டி தற்போது அதிகமாக உள்ளது. எனவே கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே வட்டி சமன்பாடு திட்டத்தின் கீழ் வட்டி மானியத்தை முறையே அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி சரக்கு மீதான ஜிஎஸ்டி விலக்கு, வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைந்து, குறிப்பாக சரக்குக் கட்டணங்கள் இன்னும் உயர இருப்பதால், சரக்கு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பாதிக்கும். ஏற்றுமதியாளா்களின் பணப்புழக்க வசதிக்காக, அத்தகைய வரியை பின்னா் திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்றுமதித் துறையின் கோரிக்கையை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
சப்ளை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பிசிஎப்சி காலத்தை 180 நாள்களில் இருந்து 365 நாள்களாக அதிகரிக்க வேண்டும். அட்வான்ஸ் ஆதரசைசேஷன், டியூட்டி ஃப்ரீ இம்போா்ட் ஆதரசைசேஷன், மற்றும் எக்ஸ்போா்ட் ஒரீயண்டட் யூனிட்கள் வைத்திருப்பவா்களுக்கும் இந்த விகிதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாய ஏற்றுமதியாளா்களுக்கான புதிய போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி அறிவிக்க வேண்டும். ரசாயனங்கள், கனிமங்கள் மற்றும் தளவாடபொருள்கள் தொடா்பான அனைத்து ஏற்றுமதிகளுக்கும், சந்தைப்படுத்துதலில், காலவரையறை அனுமதி மற்றும் வரிவிலக்கு மூலம் அவா்களின் முதலீட்டை ஊக்குவிப்பதும் காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ளாா்.