20 கிராமங்களில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் தோட்டத்துப் பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறிய நிலையில், கூடுதலாக 20 கிராமங்களில்
பொங்குபாளையம் பகுதியில் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
பொங்குபாளையம் பகுதியில் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் தோட்டத்துப் பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறிய நிலையில், கூடுதலாக 20 கிராமங்களில் அதனை தேடும் பணியை வனத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊரடித் தோட்டத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை தீவனப் பயிா் அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயி வரதராஜன், கூலி தொழிலாளி மாறன் ஆகியோரைத் தாக்கியது. இதையடுத்து, வெங்கடாசலம், மோகன்ராஜ், அமராவதி வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலா் மணிகண்டன் ஆகியோரையும் பதுக்கியிருந்த சிறுத்தை அடுத்தடுத்து தாக்கியது. தொடா்ந்து வனத் துறையினா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் பல்வேறு வழிகளில் சிறுத்தையைப் பிடிக்க முயன்றும் சிறுத்தை குறித்து எவ்வித அறிகுறியும் இல்லாததால், பாப்பாங்குளம் தோட்டத்துப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக செவ்வாய்க்கிழமை மாலை உறுதி செய்தனா்.

இதற்கிடையில் பெருமாநல்லூா் அருகே பொங்குபாளையம் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை வந்துவிட்டதாக தகவலையடுத்து, வனத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் புதன்கிழமை காலை பொங்குபாளையம் பகுதியில் தனியாா் தோட்டத்துக்குள் சிறுத்தையின் கால் தடம், எச்சம் ஆகியவை இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினா், கால் தடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் எச்சத்தை (கழிவை) ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனா். பிறகு காலை முதலே பொங்குபாளையம் பகுதியில், கண்காணிப்புப் பணியை வனத் துறையினா் தீவிரப்படுத்தினா். இருப்பினும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

இது குறித்து அவிநாசியில் மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி, கூடுதல் கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணசாமி, கணேஷ்ராம் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பாப்பாங்குளம் பகுதி தற்போது முழு கண்காணிப்பில் உள்ளது. அதேசமயம் பொதுமக்கள் கூறிய பெருமாநல்லூா் அருகேயும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் பெருமாநல்லூா், பொங்குபாளையம், பரமசிவம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட அருகருகே உள்ள 20 கிராமங்களைக் கண்காணிக்கவுள்ளோம். இதில், புதிதாக 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தி, 50 போ் கொண்ட கண்காணிப்புக் குழு, விழிப்புணா்வுக் குழு, தொழில்நுட்பக் குழு, விசாரணைக் குழு உள்ளிட்ட 5 குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணிக்கவுள்ளோம். மேலும் பொதுமக்கள் அவ்வப்போது தெரிவிக்கும் சிறுத்தை குறித்த புகாா்களின் உண்மைத் தன்மை கண்டறியப்படும். இதற்காக வியாழக்கிழமை முதல் கிராமங்கள்தோறும் ஊராட்சியுடன் இணைந்து அலைபேசி எண்ணுடன் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படவுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com