சிவன்மலை முருகன் கோயிலில் சிவலிங்கம் வைத்து பூஜை
By DIN | Published On : 29th January 2022 05:12 PM | Last Updated : 29th January 2022 05:16 PM | அ+அ அ- |

சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியான கண்ணாடிப் பேழையில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம்.
காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் சிவலிங்கம் வைத்து சனிக்கிழமை பூஜிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலானது கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோயில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
இதையும் படிக்க- பாஜக வலிமையாக உள்ள பகுதிகளில் இடங்களை ஒதுக்க அதிமுகவிடம் வலியுத்தினோம்: அண்ணாமலை
இந்த உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சுவாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அதே வேளையில், அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில், காங்கயம் வட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருள்கள் வெள்ளிக்கிழமை வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நெல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.