தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்
By DIN | Published On : 09th July 2022 04:56 PM | Last Updated : 09th July 2022 04:56 PM | அ+அ அ- |

தாராபுரம் பெரியகடை வீதி முன்பாக சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
திருப்பூர்: தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசிலை, சுங்கம், பொள்ளாச்சி சாலை சந்திப்பு, சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், கடைகளில் பொருள்கள், விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்ததால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அண்ணாசிலை முதல் சங்கம் வரையில் ஆக்கிரமிப்புகளை கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் அகற்றி வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடை கால்வாய் அமைக்கவும் கடைகளின் முன்பாக குழிகள் வெட்டப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாள்களாக போதிய அளவு வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையும் படிக்க: ஓமலூர் அருகே சிமெண்ட் லாரி விபத்து: துரிதமாக செயல்பட்டு ஓட்டுநரை மீட்ட மக்கள்
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் பெரியகடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ராமர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.