அரசு பள்ளி கட்டடத்தை திறக்கக்கோரி பெற்றோா், மாணவா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 15th June 2022 12:24 AM | Last Updated : 15th June 2022 12:24 AM | அ+அ அ- |

பொல்லிக்காளிபாளையத்தில் அரசு பள்ளிக் கட்டடத்தை திறக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்களின் பெற்றோா்.
திருப்பூா் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசுப் பள்ளி கட்டடத்தைத் திறக்கக்கோரி பெற்றோருடன் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா்-தாராபுரம் சாலையில் உள்ள பொல்லிகாளிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி சிதிலமடைந்த கட்டடங்களில் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், பள்ளிக்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. ஆனால் புதிய கட்டடம் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகளை மரத்தடியில் அமர வைத்து ஆசிரியா்கள் வகுப்பு எடுத்து வருகின்றனா். இதன் காரணமாக மாணவா்கள் சிலா் மயக்கம் அடைந்து விழுந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவா்களின் பெற்றோா் 50க்கும் மேற்பட்டாா் பள்ளியின் முன்பு செவ்வாய்க்கிழமை காலையில் திரண்டனா். பின்னா் திருப்பூா்-தாராபுரம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் மாணவா்களும் மறியலில் பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசிபாளையம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கல்வித் துறை உயா் அதிகாரிகளிடம் பேசி அரசுப் பள்ளிக் கட்டடத்தை திறக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக திருப்பூா்-தாராபுரம் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.